விடியும் முன் எப்பொழுதும் எழும் தாய் அன்றும் எழுந்து அன்றைய தினத்திற்க்கான தனது வேலைகளை செய்ய ஆரம்பித்து இருந்தாள். சற்று நேரம் கழித்து பிள்ளைகளையும் கணவரையும் எழுப்பினாள். குழந்தைகளின் காதில் வானொலி ஒலித்தது. “இன்று ஒரு தகவல்” சொல்லிக்கொண்டிருந்தார் தென்கச்சி கோ. ஸ்வாமிநாதன். கேட்டும் கேட்காமலும் அரை தூக்கத்தில் புரண்டு கொண்டிருந்தனர் பிள்ளைகள் இருவரும். அப்பாவும் அம்மாவும் எதை பற்றியோ  மிகவும் மும்முரமாக பேசி கொண்டு இருந்தது அரைகுறையாக காதில் கேட்க ஆர்வமிகுதியால் எழுந்தோடி வீட்டின் பின்புறம் வந்தனர்.

அங்கு தண்ணீர் வீட்டை சூழ்ந்து புரண்டோடி கொண்டு இருந்தது. அவர்கள் வாழும் பகுதி தாழ்ந்த நில பகுதி என்பதால் அந்த பகுதியில் பலரும் தனது வீடுகளை உயர்த்தி கட்டி இருந்தனர். அங்கொன்றும் இங்கொன்றுமாய் வீடுகள் இருந்தன. சரியான வடிகால் இல்லாததால் அந்தப் பகுதி மழைக்காலங்களில் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு நீர் சூழ்ந்தே இருந்தது. சிலரது வீடுகளில் நீர் புகுந்து விட்டால் இரவில் அக்கம் பக்கம் இருக்கும் வீடுகளில் சென்று உறங்குவர். இந்த பிரச்சனையால் அந்த பகுதியில் நிலம் இருந்தும் பலரும் வீடு கட்டி குடிப்பெயராமல் இருந்தனர்.

அப்பாவும் அம்மாவும் இன்று பள்ளிக்கு குழந்தைகளை எப்படி அழைத்து செல்வதென்று பேசி கொண்டு இருந்தனர். பிள்ளைகளை கிளப்பி காலை உணவை ஊட்டி அவசர அவசரமாய் வீட்டை விட்டு கிளம்பினார்கள். சுமார் 4 கிலோ மீட்டர் கடந்து சென்றால் மேட்டுப் பகுதியை அடைந்து விடலாம். புத்தகப்பை, சீருடை, மதிய உணவு என அனைத்தையும் தனது தோளுக்கு மேல் சுமந்துக்கொண்டு அம்மாவும், மிதிவண்டியில் இரு பிள்ளைகளையும் அமர்த்தி மிதிவண்டியை தள்ளிக்கொண்டு போக அப்பாவும் ஆரம்பித்தனர். மிதிவண்டி முழுதுமாய்  மூழ்கும் அளவிற்கு நீர் புரண்டு ஓடி கொண்டு இருந்தது. பின் காரியரில் பெரியவனையும் இருக்கையில் சிறியவனையும் அமர்த்தி இருந்தார். சிறியவன் அவனே வண்டியை ஓட்டுவது போல் மிதிவண்டியின் கைப்பிடிகளை பிடித்து பாவனை செய்துக்கொண்டே வந்தான். பல வருடம் அந்த சாலைகளில் சென்று வந்ததால் எங்கு பள்ளம்-மேடு என அப்பா நன்கு அறிந்து இருந்தார். லாவகமாய் பள்ளங்களைத் தவிர்த்து மேடான பகுதியை மட்டும் பயன்படுத்தி மிதிவண்டியை நீரின் கீழ் உருட்டி கொண்டுவந்தார். அம்மா அந்த நீர் தடத்தைத் தொடர்ந்து பின் சென்றாள்.

இருக்கையில் அமர்ந்துக் கொண்டு இளையவன் அவ்வப்போது நீரின் மேல் எட்டிப் பார்த்த மிதிவண்டியின் மணியை அடித்தவாறு, நீரில் மிதந்து பள்ளி செல்லும் இந்த அனுபவத்தை ரசித்தவாறு சிரித்துக்கொண்டே கேட்டான் “அப்பா இவளோ தண்ணியும் எங்கப்பா போகுது”. “எல்லா தண்ணியும் கடலுக்கு போய் சேரும் பா” என அன்போடு கவனம் சிதறாமல் பதிலளித்தார்.

பெரியவன் தன் பங்கிற்கு “அப்பா என்னக்கு நீச்சல் சொல்லிக் கொடுங்கப்பா… நான் நாளைல இருந்து நீந்திட்டே வந்துடுறேன்” என்றான். “சரிப்பா. சொல்லித்தரேன். இந்த தண்ணி நீந்துறளவுக்கு சுத்தம் இல்லாத தண்ணி.. நம்ம எல்லாம் முழு பரிட்சை லீவுக்கு  ஊருக்கு போவோம்ல அங்க கிணத்துல சொல்லித்தரேன். சரியா?”. என்றார்.

சில வினாடிகளின் அமைதிக்குப்பின், ஏதோ சொல்ல மறந்தவர் அந்த விடயம் ஞாபகம் வந்தப்பின் தோன்றும் எழுச்சியுடன் தொடர்ந்தார் “டேய் கண்ணுங்களா… அப்பா இல்லாதப்போ இந்த தண்ணீல நீந்துறேன் குளிக்கிறேன்னு வெளிய வர கூடாது சரியா?” என்றார்.

“சரிப்பா” என்று இளையவனிடம் இருந்து மாத்திரம் பதில் வந்தது. நீருக்கு கீழ் உருண்டு கொண்டு இருந்த மிதிவண்டியை நிறுத்தி பெரியவனை திரும்பி பார்த்து “சரியா?” என்று கண்டிப்புடன் கேட்டார். சுதாரித்தவனாய் பெரியவன் சத்தமாய் “சரிப்பா” என்றான்.

இந்த பகுதியில் இரண்டு பெரிய ஏரிகளை கடந்துச் சில குளங்களைக் கடந்து இந்த நீர் வருவதால் நீரில் மீன்கள், நண்டுகள், நத்தைகள் காண்பது இவர்களுக்கு வாடிக்கை. ஆயினும் புது மழை என்பதால் நீரில் இவை இருப்பினும் கண்களுக்குப் புலப்படாது. உடைந்து மிதக்கும் குச்சிகளையும் சருகுகளையும் “அங்க மீன் பார்”, “நண்டு பார்” என்று ஒருவருக்கு ஒருவர் பொழுதுபோக்கிக் கொண்டு இவர்களது மிதவை பயணம் மேட்டுப்பகுதியை வந்து அடைந்தது.  அங்கு தெரிந்தவர் வீட்டிற்குச் சென்று அவர்களது  கொள்ளை புறத்தில் நிறைந்து இருந்த கிணற்றில் இருந்து ஒரு வாலி தண்ணீரை குனிந்து எடுத்துப் பிள்ளைகளை அப்பா குளிப்பாட்டினார். அம்மா அங்கு இருந்த துணி துவைக்கும் கல்லின் மேல் துவட்ட துண்டும் உடுத்தச் சீருடையும் எடுத்து வைத்துக் கொண்டு இருந்தார். இப்படியே நீர் வடியும் வரை தினமும் பள்ளிச் சென்று திரும்புவார்கள். பெரியவன் ஏழாம் வகுப்பு படிக்கும் வரை மழை காலத்தில் மிதந்துச் சென்று வந்தனர்.

உப்பரிகையில் (பால்கனியில்) நின்று கொண்டு பலத்த மழையிலும் பெருத்தக் காற்றிலும் வேகமாய் அசையும் மரத்தை பார்த்துக் கொண்டு இருந்தவாறு இந்த நினைவுகளை மனதில் அசைப்போட்டு கொண்டு இருந்தான் கோதண்டராமன் – பெரியவன்.

வீட்டுக்குள் அவனது பிள்ளையும் அவனது பக்கத்து வீட்டு பிள்ளையின் பேச்சு சத்தம்க் கேட்டு திரும்பிப் பார்த்தான்.

“டேய் நாளைக்கு ஸ்கூல் லீவு விட்டுடுவாங்களா டா.”

“டிவி ல சொல்வாங்க… நியூஸ் சேனல் வை” என்றான் இவனது பிள்ளை…

சிரித்துக் கொண்டே திரும்பவும் அந்த மரத்தைப் பார்த்தான்.

சில வருடங்கள் குழந்தை இல்லாமல் குழந்தைப் பெற்றெடுத்த தம்பதியினர் கோதண்டராமனின் பெற்றோர். அதனால் அப்பாவுக்கு சராசரியாக உழைக்கும் வயதும் கடந்துச் சற்று உடல் உபாதைகளும் ஏற்பட ஆரம்பித்த காலம். அரசு வருமானம் என்றாலும் மாத கடைசியில் செலவுக்கு பணம் கையைக் கடிக்கும். அப்பா அம்மா இல்லாமல் சொந்தங்களுடன் வளர்ந்தவர். அங்கொன்றும் இங்கொன்றுமாய் கடுஞ்சொற்கள் காதில் விழுந்து கொண்டேயிருந்ததால் அவரது சிறியப் பிராயம் வலி மிகுந்ததாய் இருந்தது.  நல்லக் கல்வி கிடைக்காததால் வேலையில் மேற்பதவிகளுக்கு தகுதி இழந்து பல வருடங்கள் ஒரே பதவியில் இருந்து வந்த காலம். பிள்ளைகளுக்கு தனியார் பள்ளியில் நல்ல படிப்புக் கிடைத்தால் அவர்கள் வாழ்க்கை மேலும் சீர்படும் என்று முழுவதுமாய் நம்பி இருந்தார்.

கடினமான உழைப்பாளி தீபாவளி, பொங்கல் என பண்டிகை நாட்களிலும் வேலைக்கு போவார், இரட்டை சம்பளம் என்பதால். எவ்வளவு முடியுமோ அவ்வளவு இரவு பணிக்கு செல்வார், கூடுதல் சம்பளம் கிடைக்கும் என்று. இந்த விவரங்கள் எல்லாம் வளர்ந்த பின் தானே தெரிந்துக் கொண்ட விடயங்கள். அப்பா ஒரு நாளும் பிள்ளைகளை அமர்த்தி இவற்றை பற்றிப் பேசியதில்லை.

14 கிலோ மீட்டர் மிதிவண்டி ஒட்டி அலுவலகம் செல்வார். “கால் வலிக்குது… கொஞ்சம் மெதிச்சிவிடேன்” என்று அப்பா கேட்டபோது அரை மனதுடன் “10 வாட்டி மெதிக்கிறேன்”, “50 வாட்டி மெதிக்கிறேன்”  என கணக்குப் பேசியது அவனது நினைவுக்கு வருகிறது. வேலைக்கு செல்ல ஆரம்பித்த பின் அப்பா கால் வலியால் அவதிப்படும் பொழுதும் “அப்பா நான் கால் அமுக்கட்டுமான்னு” கேட்டாலும் “வேண்டாம்ப்பா” என நிராகரித்தவர் அப்பா.

நீரின் கீழ் அப்பா எப்படி அந்த மிதிவண்டியை உருட்டி தினம் மேட்டில் கொண்டு சேர்த்தார் என்று தெரியாமல் இன்று, அவன் அடுக்கு மாடி குடியிருப்பில் யோசித்து நின்றான். அப்பா ஒரு நாளும் பிள்ளைகளை அமர்த்தி வாழ்க்கை எனும் மிதிவண்டி பயணத்தில் அவரது சுக துக்கத்தை  பற்றிப் பேசியதில்லை. அவரே அழுத்தி ஓட்டினார். பிள்ளைகள் வளர வளர பாரம் அதிகமானது,மேலும் அழுத்தி ஓட்டினார். முடியாத நாட்களில் இறங்கி மிதிவண்டியை தள்ளி கொண்டே மேட்டுக்கு கொண்டு சேர்த்தார். ஒரு நாளும் இறங்கி நடக்கச் சொல்லவில்லை. நாம் மிதந்து கொண்டே இருப்பதற்க்கு எப்பொழுதும் அப்பாக்கள் உழைத்துக்கொண்டே இருக்கின்றனர் என்கிற நிதர்சனம் புரிந்தது. அவன் கண்கள் கலங்கியது. அப்பாவின் ஆத்மார்த்தமான அன்பை உணர்ந்தவனாய் சுவற்றில் இருந்த அவரது படத்தை ஒரு முறைப் பார்த்தான்.

அப்பா இப்பொழுதும் சிரித்தமுகத்துடன்!